Tuesday, July 26, 2011

கனிமொழியை காப்பாற்றுவாரா ஜெயலலிதா!


பாவம் கனிமொழி!
வாய்ப்பு கனி மாதிரி கையில் வந்து விழுகிறது; அதைப் பிடிக்கும் நேரத்தில் நழுவிப்போக... பதறிப்போய் பிடிக்க முயன்றால் அது திரும்பவும் பாலில் விழுகிறது; இரட்டை சந்தோஷம் என்று மகிழ்ச்சி அடைய முடியவில்லை. சில மணி நேரங்களில் அது சேற்றில் போய் விழுந்துவிடுகிறது.

நீங்கள் நினைக்கிற கனிமொழி பற்றிய கவலை அல்ல இது! இந்த கே.கனிமொழி சமீபத்தில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற தலித் சமூக மாணவி. மருத்துவம் படிக்க வேண்டும் என்பது அவரது கனவாக இருந்தது. ஏழைக் குடும்பத்திலிருந்து முதன்முதலில் படிக்க வரும் பெண். தன் கனவை நிஜமாக்கும் முயற்சியில் நன்றாகவே படித்தார். இந்த ஆண்டு மருத்துவ சேர்க்கைக்கான கட் ஆஃப் மதிப்பெண் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு 188.50 ஆக இருந்தது.
 
கனிமொழி எடுத்த மதிப்பெண் 189.25. எனவே நம்பிக்கையோடு விண்ணப்பித்தார் அவர்.
ஆனால் எம்.பி.பி.எஸ். தேர்வுக்குழு வெளியிட்ட மெரிட் பட்டியலில் அவரது பெயர் இல்லை. விசாரித்தபோது, அவரது விண்ணப்பத்தோடு ஜாதி சான்றிதழ் நகல் இணைத்து இல்லாததால் நிராகரிக்கப்பட்டதாக சொல்கிறார்கள் அதிகாரிகள். ‘நான் அதையும் இணைத்தே அனுப்பினேன். அது உங்கள் அலுவலகத்தில் எடுத்துப் பார்க்கும்போது எங்காவது கழன்று தனியாக வந்திருக்கும்’ என ஒரிஜினல் ஜாதி சான்றிதழைக் காட்டி வாதாடியும் யாரும் கேட்பதாக இல்லை.       

பொறியியல் சேர்க்கைக்கான கவுன்சலிங்குக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் இப்படி எதையாவது இணைக்க மறந்து விட்டிருந்தால், அவர்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். ஆனால் சம்பந்தப்பட்ட சான்றிதழ்களை நேரில் வந்து இணைத்துக் கொடுத்தால் திரும்பவும் ஏற்றுக் கொள்கிறார்கள். ஒரே மாநிலம்; ஒரே அரசு; ஒரேமாதிரி தொழில்நுட்பக் கல்வி சேர்க்கை. ஒன்றில் தவறுகளை சரிசெய்ய வாய்ப்பு தருகிறார்கள்; இன்னொன்றில் தயவு தாட்சண்யம் இன்றி நிராகரிக்கிறார்கள். ஏன் இந்தப் பாரபட்சம் என்று நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டுகளில் ஏறி நியாயம் கேட்டார் கனிமொழி. விண்ணப்பத்துடன் கொடுக்கப்பட்ட விதிமுறைகள் அடங்கிய கையேட்டில் இதற்காக விண்ணப்பத்தை நிராகரிக்கலாம் என தெளிவாக இருப்பதாக அரசு தரப்பு வாதாடியது.

ஆனாலும் விதிகளைத் தாண்டிய நியாயம் கனிமொழி பக்கம் இருப்பதை உணர்ந்தார் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஹரிபரந்தாமன். கனிமொழியின் பெயரை மெரிட் பட்டியலில் சேர்த்து அவரை கவுன்சலிங்கில் கலந்துகொள்ள அனுமதிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி, மாணவர்களின் வாய்ப்புகளை மறுக்கும் இந்த விதியையே மாற்றுமாறு மருத்துவக் கல்வித் துறைக்கு உத்தரவிட்டார்.

இந்தத் தீர்ப்பால் கனிமொழிக்குக் கிடைத்த சந்தோஷம் சில மணி நேரங்கள்கூட நீடிக்கவில்லை. ‘கனிமொழியின் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டால், இதேபோல காரணங்கள் சொல்லி ஏகப்பட்ட பேர் வழக்கு போடுவார்கள். அப்புறம் மருத்துவ அட்மிஷனே சிக்கலாகிவிடும்’ என்று உயர் நீதிமன்ற பெஞ்ச்சில் தமிழக அரசு தரப்பில் அப்பீல் செய்து இந்தத் தீர்ப்புக்குத் தடை வாங்கிவிட்டார்கள். கனிமொழியின் டாக்டர் கனவு இந்தத் தடையால் நொறுங்கிப் போய்விட்டது.

இந்த விஷயத்தில் அரசு காட்டிய அவசரம் மலைக்க வைப்பதாக இருக்கிறது. எத்தனை மாணவர்களின் எதிர்காலம் பாழாய்ப் போனாலும் பரவாயில்லை என்று ஒருபுறம் இதே நீதிமன்றத்தில் சமச்சீர் கல்வி வழக்கை இழுத்தடிக்கப் பார்த்தது. அவசரம் காட்ட வேண்டிய எத்தனையோ அவசியமான விஷயங்களைத் தள்ளிப்போடும் அரசு, ஒரு ஏழை மாணவியின் கனவை சிதைக்க மட்டும் வேகம் காட்டுவது நியாயமா? பல அப்பாவி மாணவர்களின் ஆசைகளை பொசுக்கும் அட்மிஷன் விதியை நீதிமன்றம் சொல்வதற்கு முன்பாகவே நீக்கியிருக்க வேண்டாமா?

காமராஜர் முதல்வராக இருந்தபோது ஒரு அதிகாரிகள் கூட்டம். தென்மாநிலங்களில் எங்காவது ஐ.ஐ.டி. உயர்கல்வி மையத்தை நிறுவலாம் என்று மத்திய அரசு ஆலோசனை செய்துவருவது பற்றிக் குறிப்பிட்ட காமராஜர், ‘அந்த ஐ.ஐ.டி. சென்னையில் அமைய வேண்டும். அதற்கு என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள்...’ என்று அதிகாரிகளிடம் கேட்டார். ‘ஐ.ஐ.டி.க்கு நிறைய இடம் தேவை. சென்னை நகருக்குள் அவ்வளவு பெரிய இடம் கிடையாது. வேறு ஏதாவது அரசுத்துறையின் இடத்தை மாற்றித் தரவும் முடியாது. விதிமுறைகளை மீறியதாகிவிடும்.
 
ஐ.ஐ.டி.யால் பெரிதாக ஆதாயம் ஏதுமில்லை’ என்கிறரீதியில் சொல்லி தட்டிக் கழிப்பதிலேயே அதிகாரிகள் இருந்தனர். காமராஜர் திட்டவட்டமாகச் சொன்னார்... ‘இந்தக் கூட்டம் அதை எப்படிச் செய்யலாம்னு முடிவெடுக்கத்தான். எப்படி அதை செய்யக்கூடாதுன்னு கண்டுபிடிக்கறதுக்காக இல்லை. மக்களுக்கு நன்மை செய்யறதுக்குத்தான் நாங்க ஓட்டு வாங்கி பதவிக்கு வந்திருக்கோம். நீங்களும் சம்பளம் வாங்கி வேலை செய்யறீங்க. அதை ஞாபகத்துல வச்சுக்குங்க!’

அதன்பின் கவர்னர் மாளிகை வளாகத்தில் சில ஏக்கர்கள் கையகப்படுத்தப்பட்டு ஐ.ஐ.டி. அமைந்தது. விதிமுறைகள் என்பது மனிதர்கள் தீர்மானித்தவை. அவை காலைச் சுற்றுகின்றன என்றால் வெட்டிப் போடுவதில் தப்பில்லை. இந்த சிந்தனை இப்போதைய ஆட்சியாளர்களுக்கு இல்லையே என்ற ஏக்கம்தான் எழுகிறது.

தமிழக முதல்வர் காப்பாற்றுவார கனிமொழியை!