Friday, July 31, 2009

ஜீ. விக்குத் தடை!



த்திய அமைச்சர் ஒருவர் தொடர்பான செய்திகளை ஜூனியர் விகடனில் பிரசுரம் செய்யக்கூடாது!' என சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் தடை போட்டிருந்தது. மத்திய தொலைத் தொடர்புத் துறையின் ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் விற்பனை சம்பந்தமாக, அடுத்தடுத்து ஜூ.வி. செய்திகள் வெளியிட்டு வந்தது.

கடந்த ஜூலை 20-ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு கொடுத்த தடை நீக்கத் தீர்ப்பில், 'பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் தங்கள் செயல்பாடு பற்றிய விமர்சனங்களுக்குத் தடைகோர முடியாது' என்று கூறியிருந்தார்.அத்துடன், அந்த அமைச்சர் ஜூனியர் விகடனுக்கு வழக்குச் செலவாக ரூபாய் பத்தாயிரம் செலுத்த வேண்டும்' என்றும் நீதிபதி சந்துரு தன்னுடைய தீர்ப்பில் கூறியிருந்தார்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து, அமைச்சர் மீண்டும் சென்னை உயர் நீதிமன்ற பெஞ்சில் அப்பீல் செய்து, நீதிபதி சந்துருவின் தீர்ப்புக்குத் தடை வாங்கியுள்ளார். இதனால் ஜூ.வி-யில் அந்த அமைச்சர் சம்பந்தப்பட்ட செய்தி களைப் பிரசுரிக்கக் கூடாது என்று அவர் ஏற்கெனவே பெற்றிருந்த தடை, மறுபடி அமலுக்கு வந்திருக்கிறது. ஜூ.வி-யின் சட்டப் போராட்டம் அடுத்த கட்டம் நோக்கி நகரும் இந்த நிலையில்... டெல்லியிலிருக்கும் மூத்த வழக்கறிஞர்கள் சிலர் நம்மிடம் பேசினார்கள். பொது வாழ்வில் உள்ளவர்கள் பத்திரிகை சுதந்திரத்துக்கு எதிரான கருத்துக் கொண்டிருப்பது குறித்தும், அதன் அபாயங்கள் குறித்தும் பல்வேறு கருத்துகளை அவர்கள் பகிர்ந்து கொண்டனர். சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் (இவர் முன்னாள் சட்ட அமைச்சர் சாந்தி பூஷனின் மகன், பல்வேறு தொண்டு நிறுவனங்களின் வழக்கறிஞர்),

''இந்த விவகாரத்தில் மீண்டும் தடை கொடுக்கப்பட்டி ருப்பது துரதிர்ஷ்டமானது.

நீதிமன்றங்கள் இது போன்ற விண்ணப்பங்களுக்கு அனுமதிகொடுத்து, பத்திரிகைகள் வெளியிடும் செய்திகளுக்குத் தடை கொடுத்தால்... அது ஊழல்வாதிகளுக்குத்தான் உதவும். இவர்களைப் பற்றிய செய்தியை மக்களுக்குக் கொண்டுபோய் உஷார் படுத்தவும் தடங்கலாக அமைந்துவிடும். இது அடிப்படை உரிமைக்கும் பொது நலனுக்கும் எதிரானது. இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள பேச்சுரிமை மற்றும் ' எழுத்துரிமையை பறிப்பதாகும்.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நேர்மையற்ற 'டிரான்ஸாக் ஷன்' [transaction] நடந்துள்ளது என்று நாடறிய விவாதம் நடக்கிறது. அதன் உள்விவரங்களை அறிய மக்களுக்கு முழு உரிமை இருக்கிறது. அவற்றையெல்லாம் வெளிகொண்டு வரும், வெளியிடும் செய்தியில் தவறு இருந்தால், அதை எதிர்த்து தாராளமாக வழக்குப் போடலாம். பத்திரிகை சொன்னது சரியா, தவறா என்று நீதிமன்றம் தீர்மானித்து தீர்ப்பு வழங்கலாம். அதில் தவறில்லை. வாக்களித்த மக்கள் அறிய விரும்பும் தகவல்களை அளிக்கின்ற கடமையைத்தான் ஜூனியர் விகடன் தன்னுடைய கட்டுரைகள் மூலமாக செய்து வருகிறது. அதிலும், நாடு முழுவதும் பெரும் விவாதத்துக்கு உள்ளாகியுள்ள ஒரு விஷயத்தில் ஜூனியர் விகடன் மட்டும் செய்தி வெளியிட முடியாத வகையில் தடை போட்டிருப்பது வியப்பாக உள்ளது...'' என்றார்.

சுப்ரீம் கோர்ட்

வழக்கறிஞர் ராஜீவ் தவான் (பல்வேறு பொது நலன் வழக்குகளில் ஆஜராகி பெயர் பெற்றவர்),

''கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில் எழுதுபவர் களையும் பேசுபவர்களையும் ஒரு போதும் பலிகடாவாக (victimize) ஆக்கக் கூடாது. அப்படிச் செய்தால்,அவர்கள் மேற்கொண்டுள்ள லட்சியத்தில் தொடர்ந்து உறுதியாகச் செல்ல முடியாது என்பது என்னுடைய கருத்து இதைத் தான் இந்த வழக்கிலும் சொல்ல விரும்புகிறேன்!'' என்றார்.

மாநிலங்களவை உறுப்பினரும் பிரபல வழக்கறிஞரு மான ராம் ஜெத்மலானி (அகில இந்திய அளவில் வழக்குகளை எடுத்து வாதாடுபவர்),

''இது போன்ற தடைகள் வாங்குபவர்களில் பெரும் பாலானவர்கள் செல்வாக்கு பெற்றவர்கள். நேர்மையாக இல்லாத சிலர்தான் தங்களைப் பற்றி வெளியே வரக் கூடாது என்றுபதறுகிறார்கள். சிலர் தடை கேட்டு நீதிமன்றத்தை நாடுவதும் அதற்குத்தான். இந்த வழக்கைப் பொறுத்த வரையில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதால், விளக்கமாகப் பேசுவதில் சிக்கல் இருக்கிறது. இதனால், நடப்பதெல்லாம் சரியா... தவறா என்று என்னால் அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை.

ஆனால், என்னுடைய தனிப்பட்ட கருத்தாகச் சொல்கிறேன்... நான் நீதிபதியாக இருந்தால், நிச்சயம் இப்படியரு தடை கொடுக்க மாட்டேன். இப்படியரு அப்பீலை அனுமதித்திருக்கவே கூடாது என்றே சொல்லுவேன். பத்திரிகைகள் அடுத்து என்ன எழுதப்போகிறது என்று தெரியாமலே,பொது வாழ்க்கையில் - அதுவும் மிகுந்த சர்ச்சைக்கு உள்ளான ஒருவரைப் பற்றி மேற்கொண்டு எழுத வே கூடாது என்று தடைவிதிப்பது, நீதிமன்றங்களின் பணியல்ல. கருத்துரிமை யை அனைவருக்கும் உறுதி செய்வதற்குத் தான் அரசியல் சாசனம் பக்கபலமாக உள்ளது. அடிப்படை உரிமைகளில் நீதிமன்றத் தலையீடு இருக்கலாம். ஆனால், அதனை தேவையான நேரத்தில்தான் உபயோகப்படுத்த வேண்டும். மிக அரிதான

அபூர்வமான வழக்குகளில் (rare in the rare cases) மட்டுமே இப்படிப்பட்ட தடையை நீதிமன்றம் விதிக்கலாம்.

குறிப்பிட்ட இந்த அரசியல்வாதியைப் பொறுத்த வரையில்... அவருடைய செய்திகளை வெளியிடாமல் தடை வழங்குவதற்கான அரிதான, அபூர்வமான காரணம் எதுவும் இல்லை. அதனால், தடை கொடுக்கவேண்டிய அவசியமில்லை. நாடாளுமன்றம் வரையில் புயலாக வீசும் ஒரு சர்ச்சையை மக்களுக்கு முழுமையாகக் கொண்டு சேர்க்கும் பத்திரி கைப் பணிக்கு இப்படியரு தடை விதித்திருக்க வேண்டியதில்லை!'' என்றார் ராம்ஜெத்மலானி.

வாசகர்கள் நன்கு அறிந்த அந்த மத்திய அமைச்சர், 'ஜூ.வி-யில் தன்னைப் பற்றிய செய்தி வெளிவரக் கூடாது' என வாங்கிய தடையை சென்னை உயர் நீதிமன்றம், கடந்த வாரம் நீக்கி உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில், அமைச்சரின் அப்பீல் மனுவை விசாரித்து, அந்தத் தடை நீக்கத்தை ஜூலை 29-ம் தேதியன்று ரத்து செய்தது உயர் நீதிமன்றம்..!

இதே நாளில்... வேறொரு வழக்கில் பத்திரிகை சுதந்திரத்தைக் காப்பாற்றித் தீர்ப்பளித்துள்ளது உச்ச நீதிமன்றம்..!

அந்த வழக்கு இதுதான்...

1999-ம் ஆண்டு முன்னாள்கடற்படை தளபதி நந்தா என்பவரின் பேரன் சஞ்சீவ் நந்தா என்ற இளைஞர், டெல்லியில் பி.எம்.டபிள்யூ காரை அதிகாலையில் அதிவேகமாக ஓட்டிச் சென்றார். அதனால், கார் சாலைத் தடுப்பில் மோதி, ஓரத்தில் தூங்கிக்கொண்டிருந்த ஐந்து பேர் உடல் நசுக்கிக் கொல்லப்பட்டனர்.

இந்த வழக்கு நீதிமன்றம் போக, பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த நந்தாவைக் காப்பாற்ற கீழ்க்கோர்ட்டில் வழக்கறிஞர்கள் கடுமையாக முயன்றனர்.

பாதிக்கப்பட்டவர்களை சாட்சியம் அளிக்க விடாமல் தடுத்ததோடு, அந்தக் கொடூரத் தை நேரில் பார்த்த அரசு தரப்பு சாட்சியையும் விலைக்கு வாங்கிவிட்டனர்.

முக்கிய சாட்சியான மும்பையைச் சேர்ந்த சுனில் குல்கர்னியை, நந்தாவின் வழக்கறிஞர் ஆர்.கே.ஆனந்தும், அரசு வழக்கறிஞர் .யு.கானும் சேர்ந்து பிறழ் சாட்சிகளாக்கினார்கள்.

இந்த அநியாயங்களை, என்.டி.டி.வி. தொலைக்காட்சியின் புலனாய்வு டீம், ரகசிய கேமராக்கள் மூலம் குறிப்பிட்ட அந்த சாட்சிகளிடமே விசாரித்து உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது. பலத்த அதிர்வுளை ஏற்படுத்திய இந்த ஒளிபரப்புக்குப் பிறகு, டெல்லி உயர் நீதிமன்றமே தன்னிச்சையாக இந்த விவகாரத்தை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

குடிவெறியில் காரை ஓட்டி ஐந்து உயிர்களை கொன்ற சஞ்சய் நந்தா மட்டுமல்ல, அவரைக் காப்பாற்ற முயற்சித்த வழக்கறிஞர் .யு.கான் மற்றும் வழக்கறிஞர் ஆர்.கே.ஆனந்த் போன்றவர்களையும் குற்றவாளிகள் என சொல்லித் தீர்ப்பளித்தது டெல்லி நீதிமன்றம். அதற்கான தண்டனையாக அந்த வழக்கறிஞர்களுக்கு நீதிமன்றத்தில் குறிப்பிட்ட காலம் வரை வாதாடத் தடை விதித்து, மூத்த வழக்கறிஞர் என்ற அந்தஸ்தையும் ரத்து செய்தது.

ஆர்.கே.ஆனந்தும் .யு.கானும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்ததோடு மட்டுமல்லாமல்... தங்களை மாட்டி விட்ட மீடியாக்களின் ரகசிய கேமரா ஆபரேஷன்களுக்கு தடை விதிக்கக் கோரி, உச்ச நீதிமன்றம் சென்றனர்.

இந்த வழக்கில்தான் பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாக்கும் ஆணித்தரமான தீர்ப்பை அளித்திருக்கிறார்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகளான பி.என்.அகர்வால், ஜி.எஸ்.சீங்வி, ஆலம் ஆகியோர்.

வழக்கறிஞர் ஆர்.கே.ஆனந்தின் மனுவை நிராகரித்ததோடு, தண்டனையையும் நியாயப்படுத்தியுள்ளது உச்ச நீதிமன்றம். மேலும், அரசு வழக்கறிஞர் .யு.கான் இதில் சம்பந்தப்பட்டு இருப்பதை டெக்னிக்கலாக மறுப்பதற்கில்லை என்று சொல்லியிருந்தாலும் அவருடைய தரப்பு நியாயத்தை உயர் நீதிமன்றம் சரியாக விசாரிக்காத பட்சத்தில்... அவர் மீதான தீர்ப்பை மறுபரிசீலனை செய்யலாம் என்று உயர் நீதிமன்றத்துக்குப் பரிந்துரைத்துள்ளது.

ஆனால், இந்த விவகாரத்தில் முக்கியமான அம்சமாக தொலைக்காட்சி பத்திரிகையாளர்களின் ரகசிய கேமரா புலனாய்வு யுக்தியை உச்ச நீதிமன்றம் ஆணித்தரமாக நியாயப்படுத்தி இருப்பதுதான். அதுவும் கடந்த இதழ் ஜூ.வி-யில்தான் நாம் இதே போன்ற ரகசிய கேமரா ஆபரேஷனை நடத்தி, மத்திய அமைச்சர் ஒருவரின் பேரால் நடத்தப்படும் கோடிக்கணக்கான பேரங்களை வெளிக்கொண்டு வந்திருந்தோம்.

இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.

''பி.எம்.டபிள்யூ வழக்கு சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களின் நடவடிக்கைகள் ரகசிய கேமராக்கள் மூலம் எடுக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கறிஞர்கள் நீதிமன்ற அவமதிப்பு செய்துள்ளனர். ரகசிய கேமராக்கள் மூலம் எடுக்கப்பட்ட டிரான்ஸ்கிரிப்ட் உண்மையானவை. சாட்சியமாக இருப்பவை. இப்படி சாட்சிகளை கொடுக்கும் மீடியாக்களுக்கும் தொலைக்காட்சி சேனல்களுக்கும் நீதிமன்றம் கடிவாளம் போட முடியாது. அப்படிச் செய்தால், அந்தத் துறைக்கு அது கெடுதலை ஏற்படுத்துமே தவிர, நன்மையை ஏற்படுத்தாது!'' என்று மூன்று நபர் கொண்ட உச்ச நீதிமன்ற பெஞ்ச், சுத்தியால் அடித்துத் தீர்ப்பு கூறியுள்ளது.

மேலும், ''மீடியாக்களின் புலனாய்வு ஆபரேஷன்களுக்கு, நீதிமன்றத்தின் முன்அனுமதி பெறவேண்டும் என்பதையும் ஏற்க முடியாது. தடைகளோ கட்டுப்பாடுகளோ செய்தால், அது ''Pre-Censorship'' என்ற நிலை உருவாகிவிடும். நீதிமன்றம் தணிக்கை செய்த பிறகுதான் பத்திரிகைகள் வெளியாக வேண்டும் என்பதாகிவிடும். இது நீதிமன்றத்தின் வேலையே இல்லை. பத்திரிகை சுதந்திரத்தை இப்படிக் கையாள முடியாது. இது வெறுக்கத்தகுந்த நடவடிக்கை. மீடியாக்கள்தான் சுயக்கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும். இதிலெல்லாம் நீதிமன்றம் தலையிட முடியாது. அரசியல் சாசனத்தின் 19(1)-ன் கீழ் பத்திரிகைகள் சுயமாகச் செயல்பட முழு உரிமை இருக்கிறது'' என்று உச்ச நீதிமன்றம் ஆணித்தரமாகத் தீர்ப்பளித்திருக்கிறது.

ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகைத் துறையை முடக்க நினைப்பவர்கள், இந்தத் தீர்ப்புக்குப் பிறகாவது எண்ணத்தை மாற்றிக் கொண்டால், நல்லது!