Thursday, August 6, 2009

இந்தியாவின் முதல் பாஸ்போர்ட் திருநங்கை!


ரதக் கலையில் உச்சம் தொட்ட நடன நங்கைகள் யாருக்கும் வராத புதுவகை இடைஞ்சல் கள் கடந்து நடன அரங்கைத் தன்வசமாக்கிய திருநங்கை... நர்த்தகி நட்ராஜ். 'அரவாணி' என ஒதுக்கிய உலகத்தைத் தன் திறமையால் ஜெயித்துக் காட்டிய நர்த்தகியின் வாழ்க்கையில் இருந்து...

001 ''மதுரை அனுப்பானடிதான் நான் பிறந்து வளர்ந்தது. சின்ன வயசுலயே எனக்குள் இருந்த பெண்மையை உணர ஆரம்பிச்சேன். 'இத்தனை புஷ்டியா, அழகாப் பிறந்திருக்கோமே... இன்னும் நீளமா முடி வளர்த்து, சடை பின்னி, பூ, பொட்டுவெச்சு அழகு பார்க்கலாமே'ன்னு அறியாப் பருவத்திலயே என் அழகை, பெண்மையைப் பத்தி எனக்குப் பெருமை.

மதுரையில பிறந்த எல்லாரும் மீனாட்சியையும், சுந்தரேஸ்வரரையும் மனசுக்கு ரொம்ப நெருக்கமா நினைப்பாங்க. ஆனா, எனக்கு உலகத்திலேயே மதுரை யில் மட்டும் வலது பாதத்தைத் தலைக்கு மேல தூக்கி நிற்கிற நடராஜரையும் பிடிக்கும். நானும் தத்தக்காபித்தக் கான்னு எனக்குத் தெரிஞ்ச நாட்டிய பாவனைகளைச் செஞ்சுட்டு இருப்பேன். இதைச் சுத்தி இருக்கிறவங்களும் பெத்தவங்களும் புரிஞ்சுக்கவே இல்லை. 'நேரா நில்லு... நிமிர்ந்து நட'ன்னு ஒரே சித்ரவதை.

ஒவ்வொரு நாளும் நரகம். அவங்க இழுத்த இழுப்புக்கு நம்மால போக முடியாதுன்னு ஒருநாள் புரிஞ்சுது. 'இனிமே நீ இங்கே இருக்க வேணாம். எங்களால உனக்கும், உன்னால எங்களுக்கும் சங்கடம்தான். நீ வீட்டைவிட்டுப் போயிடு'ன்னு சொன்னாங்க. நானும் என் தோழி சக்தியும் வீட்டைவிட்டு வெளியேறினோம். அவளுக்கும் எனக்கு ஏற்பட்ட அதே சங்கடம் தான். எங்க வீட்டைவிட்டு இந்த அகன்று பரந்த உலகத்துக்குள் காலடி எடுத்துவெச்ச நாளின் மனநிலை இப்பவும் எனக்கு ஞாபகம் இருக்கு. இன்றைக்கு ஏதாவது பெரிய துக்கமோ, சந்தோஷமோ வந்தா அந்த நாளின் மனநிலையை மனசுக்குள் இருத்திக்கிட்டா, எதையும் கடந்து வந்துடுவேன்!''

002 ''எதிர்பார்த்த மாதிரியே உலகம் எங்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு குடுக்கலை. எனக்குள் இருந்த பெண்மையையும் போஷிக்க முடியலை. எந்தக் கலைக்காக ஆசைப்பட்டு வந்தேனோ, அதையும் கத்துக்க முடியலை. பருவச் சிக்கல்கள் வேறு மனசையும் உடம்பையும் அலைக்கழிச்சது. தங்க இடம் இல்லாம, திங்க சாப்பாடு இல்லாம, அரவணைக்க மடி இல்லாம, நாடோடிகளா அலைஞ்சோம். 'ஏன் சக்தி இவ்வளவு கஷ்டப்படணும்? பேசாம, நமக்கான குலத் தொழிலா இந்த சமூகம் ஒதுக்கின சாக்கடையில் இறங்கிடுவோம்... வேற என்ன பண்றது?'ன்னு சக்தி மடியில விழுந்து அழுதேன்.

அந்தக் கொடுமையான நாளில் சக்திதான் என்னைத் தடுத்தாட்கொண் டாள். 'இல்லைம்மா... ஒரு வருஷம் பொறுமையா இருக்கலாம். அதுக்குப் பிறகும் எந்த நல்லதும் நடக்கலைன்னா, பார்க்கலாம். ஆனா, இந்த ஒரு வருஷமும் மிக உயர்ந்தபட்ச ஒழுக்கத்தோடு இருக்கணும்'னு சொன்னா. ஒரு வருஷம்கூடக் காத்திருக்கத் தேவை இல்லாம, கொஞ்ச நாள்லயே சின்னதா ஒரு வெளிச்சம் கிடைச்சது. அந்த நாளில் தொடங்கிய ஒழுக்கமும் சுயக் கட்டுப்பாடும்தான் இப்போ வரை எங்களைச் செலுத்திட்டு இருக்கு!''

003 ''சாம்பவனைகளுக்காக (தேவதாசி முறையில் உணவுக்காகக் கோயிலில் ஊழியம் புரிவது!) மதுரைக் கோயில்களில் ஆடிட்டு இருந்தேன். நம்மளை ஏத்துக்கிட்டாங்களேன்னு ஒரு மனசு சமாதானப்படுத்தினாலும் இன்னொரு மனசு அடங்க மறுத்துச்சு. குரு கிட்டப்பா பிள்ளைகிட்ட நடனம் கத்துக்க வந்தேன். 'மரபு முறை பரதம் கத்துக்கச் சிரமமா இருக்கும். ஆனா, அதுதான் நிலையான ஆத்மா. நவீன பரதம் கத்துக்கறதும், அதன் மூலமா பேரும் புகழும் வாங்குறதும் சுலபம். ஆனா, அது தற்காலிகம். எனக்குத் தற்காலிக ஏற்பாடுகளே பிடிக்காது. உனக்கு?'ன்னு கேட்டார். 'என் பேர் கல்வெட்டுல எழுதப்படுமான்னு எனக்குத் தெரியாது. ஆனா, வெற்றுத் தாளில் எழுதப்படுவதில் விருப்பம் இல்லை'ன்னு சொன்னேன். அரவணைச்சுக்கிட்டார். வஞ்சனை வைக்காம பரதத்தின் அத்தனை நெளிவுசுளிவுகளையும் எனக்குக் கத்துக் கொடுத்த என் ஆயுளுக்குமான ஆசான். அப்பதான் மத்திய அரசின் ஸ்காலர்ஷிப் வாய்ப்பு தேடி வந்தது. இறுதிச் சுற்று வரை வந்தேன். தேர்வுக் குழுவில் இருந்த பத்மா சுப்ரமணியம், 'ஒரு திருத்தமான பெண்ணா, தேர்ந்த நாட்டியத் தாரகையா இருக்கே. நீ தொடர்ந்து நாட்டியத்தின் மீது இதே காதலோடு இருப்பியா... இல்லை கொஞ்ச நாள் கழிச்சு 'எல்லாம் போதும்'னு செட்டில் ஆயிடுவியா?'ன்னு கேட்டாங்க. அவங்க கால்ல விழுந்த என்னை அள்ளி அணைச்சுக்கிட்டாங்க. மத்திய அரசின் அந்த ஸ்காலர்ஷிப் தான் என் பரதத் திறமைக்கான முதல் அரசு அங்கீகாரம்!''


004 ''சென்னையில் ஓர் அரங்கேற்றம். மகாபாரதத்தில் வரும் சிகண்டியின் கதையை 'அம்பை'ங்கிற பேர்ல நாட்டிய நாடகம் ஆக்குறேன். முந்தின ஜென்மத்தில் திருதராஷ்டிரனுக்காக அம்பையைத் தூக்கி வருகிறார் பீஷ்மர். ஆனா, அம்பைக்கு ஒரு காதலன் இருக்கி றான்னு தெரிஞ்சதும், திருதராஷ்டிரன் அவளை வேண்டாம்னு சொல்லிடுறான். இது தெரிஞ்சதும் அம்பையின் உண்மையான காதலனும் அவளை வேண்டாம்னு விட்டு விலக்கிடுறான். வேற வழி இல்லாம, 'என்னைத் தூக்கிட்டு வந்த நீங்களே என்னை ஏத்துக்கங்க'ன்னு பீஷ்மரிடம் கெஞ் சுறா அம்பை. அவரும் மறுத்துடுறார். நிர்க் கதிக்கு ஆளாகும் அம்பை, அடுத்த ஜென் மத்தில் சிகண்டி என்ற திருநங்கையாகப் பிறந்து அர்ஜுனனுக்குத் தேரோட்டி ஆகிறாள். அத்தனை லாகவமாகத் தேரைச் செலுத்தி பீஷ்மர் மீது அர்ஜுனன் மலை மலையாக அம்பு கள் எய்ய சிகண்டியின் மனவேதனையும் காரணம்.

சிகண்டியாக அழுது மாயும்போதும் அம்பையாக ரௌத்ரம் காட்டும்போதும் எனக் குள் ஏதோ ஓர் இனம் புரியாத சோகமும் வேகமும். அழுறேன், ஓடுறேன், உறுமுறேன். பேய் பிடிச்சுக்கிட்ட மாதிரி நானே உணர்ந்தேன். நாடகம் முடிஞ்சதும் 'இன்னிக்கு என்ன இத்தனை கோபம்... வேகம்?'னு ஒருவர் கேட்டார். 'நீங்க ஒரு நாள் அம்பையாவோ, சிகண்டியாவோ வாழ்ந்து பாருங்க, புரியும்'னு சொன்னது நான் இல்லை... எனக்குள் இருக்கும் அம்பை!''

005 ''இந்தியாவிலேயே திருநங்கை என முத்திரையுடன் முதல் பாஸ்போர்ட் வாங்கியது நான்தான். அதுவே ஒரு பெரும் போராட்டம். முதல் பயணமாக அமெரிக்கா போய் இறங்குறோம். வரவேற்க வந்தவங்களுக்கு அப்பதான் நான் ஒரு திருநங்கைன்னு தெரிஞ்சது. அதிர்ந்துட்டாங்க. என்ன பண்றதுன்னு தெரியாம, வேண்டாத விருந்தாளி மாதிரி அழைச்சுட்டுப் போறாங்க. ரெண்டு வார நிகழ்ச்சி ஒரு நாள் நிகழ்ச்சியா மாற்றப்பட்டது. காரணம் புரிஞ்ச அன்னிக்கு ராத்திரி நான் தூங்கலை. விடிஞ்சது. நான் ஆடும் நேரம் வந்தது.

'பம்பை பறை அதிரக் கொட்டு முரசொலிக்க தமிழர் திருநாளாம்... சிலம்பு சிலுசிலுக்க சலங்கை சலகலக்க ஆனந்தத் திருநாளாம்... இது அமெரிக்கத் திருநாளாம்!'னு உணர்வுகள் கொப்பளிக்கும் குரலில் பாடிக்கிட்டே முழு உத்வேகத்துடன் ஆடத் தொடங்கினேன். பரதத்தில் அமெரிக்க வாழ் தமிழர்களின் கலாசாரத்தையும் கலந்து ஆடினேன். அது எனக்கே புதுசு. அவங்களுக்கு ரொம்பவே புதுசு. நான் ஆடி முடிச்சதும் என்னைத் தலையில் தூக்கிவெச்சுக் கொண்டாடாத குறை. ஒரே நாளில் கிளம்புங்கன்னு சொன்னவங்க, ரெண்டு மாசம் அமெரிக்காவின் பல இடங்களில் நிகழ்ச்சிகள் நடத்தவெச்சுட்டுத்தான் என்னை இந்தியா திரும்ப அனுமதிச்சாங்க!''

006 ''ஐரோப்பாவில் வேறொரு அனுபவம். அங்கே டாங்கோ வகை நடனம் பிரபலம். நான் நம்ம பாரம்பரியப் பரதத்தோடு டாங்கோவின் சில அம்சங்களையும் ஒரு ஃப்யூஷன் மாதிரி கலந்து கொடுத்தேன். நல்லாவே ரசிச்சாங்க. ஆனா, நிகழ்ச்சி முடிந்ததும் ஒரு அம்மணி என்கிட்டே வந்து, 'நல்லாதான் ஆடுனீங்க. ஆனா நான் உங்கக்கிட்ட எதிர்பார்த்து வந்தது இந்தியப் பாரம்பரிய நடனத்தைதான். இந்த ஊர் டாங்கோ டான்ஸை ஆட இந்தியாவி லேர்ந்து எதுக்கு உங்களை வரச் சொல்லப் போறோம்... நான் சொல்றது உங்களுக்குப் புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்'னு சொன் னாங்க.

இதே கலாசாரக் கலவையை அமெரிக்காவில் வரவேற்றாங்களே... இந்த அம்மா இப்படிச் சொல்றாங்களேன்னு கொஞ்சம் குழப்பமா இருந்துச்சு. ஆனா, யோசிக்க யோசிக்க... நான் பண்ண தப்பு புரிஞ்சது. எந்த விஷயத்தை எங்கே செய்யலாம்னு தெரிஞ்சா மட்டும் போதாது... எதை எங்கே செய்யக் கூடாதுன்னும் தெரிஞ்சுக்கணும்!''

007''நாம நினைச்சது ஒவ்வொண்ணா நடந்து முடிஞ்சதும் அடுத்து என்னன்னு ஒரு கேள்வி எழும். ஏதோ வெற்றிடத்தில் நிற்கிற மாதிரி இருக்கும். வெற்றிகளுக்குப் பிறகு அந்த வெற்றிடம் ஏற்படுவது சகஜம்தான். அந்த வெற்றிகள் தந்த தைரியமும் நம்பிக்கையும்தான் நம்ம அடுத்தகட்ட பயணத்துக்கான எரி பொருள். இப்ப சமீபத்துல என் சிஷ்யை ஒருத்தியின் நடன அரங்கேற்றத்தை நடத்தி முடிக்கிறதுக்குள்ள ஏகப்பட்ட சிக்கல்கள். ஆனா, இத்தனை வருஷத்துல எனக்குள் குடிகொண்ட தைரிய மும் நம்பிக்கையும்தான் என் சிஷ்யையை அரவணைச்சுப் பதற்றப் படாம அவளோட அரங்கேற்றத்தை நடத்தவெச்சது. அடுத்து என்னங்கிற கேள்விக்கும் விடை தெரிஞ்சது!

No comments:

Post a Comment