Tuesday, July 14, 2009

இந்திய பணியாளர்களின் மனநிலை !

'என் வேலைக்கு உத்தரவாதம் இல்லையே..."

இப்படி ஒரு கவலைத் தோய்ந்த வாக்கியம், ஐ.டி. பணியாளர்கள் மட்டுமின்றி, வெவ்வேறு துறைகளைச் சார்ந்தவர்களின் பேச்சிலும் அதிக அளவில் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன!

பிரபல ஆய்வு நிறுவனமான பாஸ்டன் அனாலிடிக்ஸ்-சின் (Boston Analytics) நுகர்வோர் நம்பிக்கைக்கான மாதாந்திர அய்வும் இதையே கூறுகிறது.

இந்தியாவில் வேலை உத்தரவாதம் (Job security) குறித்து பாஸ்டன் அனாலிடிக்ஸ் நிறுவனம் சென்னை, டெல்லி, கோல்கத்தா, மும்பை உள்பட 15 முக்கிய நகரங்களில் மொத்தம் 10 ஆயிரம் பேரிடம் கருத்துக் கணிப்பை நடத்தியது.

இதில், 52 சதவீதத்தினர் தங்களது வேலை உத்தரவாதம் குறித்து கவலை தெரிவித்துள்ளனர். தங்களது வேலை எப்போது பறிபோகுமோ என்ற பயம் அவர்களிடம் இருப்பது தெரியவந்துள்ளது. உலகப் பொருளாதார நெருக்கடியின் பிரதிபலிப்பு மிகுதியாக இருந்த கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இந்த நிலை 48 சதவீதமாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியப் பொருளாதாரம் மீண்டு வருவதாக அரசு தெரிவித்து வரும் நிலையில், வேலை உத்தரவாதம் குறித்த கவலை மேலும் அதிகரித்திருப்பது கவனத்துக்குரியது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து, 'வேலை உத்தரவாதம் இல்லை' எனப் புலம்பிக் கொண்டிருந்தவர்களில் விகிதம் அதிகபட்சமாக இருப்பது, இந்த ஜூன் மாதத்தில்தான் என்கிறது அந்த ஆய்வு!

இந்தியாவின் 9 சதவீத பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணைபுரிகின்ற தகவல் தொழில்நுட்பம், கட்டுமானம், விமானப் போக்குவரத்து, நிதி சேவைகள், ரியல் எஸ்டேட் ஆகிய துறைகளில் கூட குறிப்பிடத்தக்க அளவில் ஆட்குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் ஓட்டல் மேனேஜ்மென்ட், வங்கி, சில்லறை வணிகம், எரிசக்தி, பார்மஸி முதலிய துறைகளில் வேலைவாய்ப்பு குறிப்பிடத்தக்க வகையில் இருப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

மேலும், இந்தியப் பணியாளர்களிடையே நேர்மறை சிந்தனை மிகுதியாகியிருப்பது ஒரு பாஸிட்டிவான அம்சம்.

'ஆட்குறைப்பால் வேலை போனால் கூட, வேறு வேலையை உடனடியாகத் தேடிக் கொள்ள முடியும்,' என்று மொத்தம் 43 சதவீதம் பேர் கருத்துக் கணிப்பின் போது குறிப்பிட்டிருப்பது ஒரு வகையில் சாதகமான மனப்போக்குதான்!

No comments:

Post a Comment